Tuesday, December 28, 2010

பிரமிப்பூட்டும் பெரிய கோயில்!

இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது ஒரு கோயில் கண்டிப்பாக இருக்கிறது. அதனால் தஞ்சாவூரை ‘கோயில் மாவட்டம்’ என்று அழைப்பது மிகப் பொருத்தம். ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் தஞ்சை என்றதும் நினைவுக்கு வருவது ‘பெரிய கோயில்’தான். கோயிலின் பிரமாண்டம் மட்டுமல்ல… இந்தக் கோயிலைப் பற்றிச் சொல்லப்படும் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆனால், இந்த விஷயங்கள் சிலவற்றில் உண்மை இல்லை. எப்படியோ வாய் வழிச் செய்தியாகக் காலம் காலமாகப் பரப்பப்பட்டு வருகின்றன.

தஞ்சை பெரிய கோயிலின் விமானம் ஒரே கல்லால் ஆனது என்கிறார்கள். கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை என்கிறார்கள். இது போன்ற கருத்துகளில் உண்மை இல்லை என்றும் சொல்கிறார்கள். இவை போன்ற செய்திகள் மட்டுமின்றி கோயிலுக்குச் செல்ல ஆவலைத் தூண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. அது & பொன்னியின் செல்வன்! கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்ததும் நம் நினைவுக்குள் வந்து உட்கார்ந்து விடுவார்கள் ராஜ ராஜ சோழன், குந்தவை தேவி, வந்தியத்தேவன் போன்றோர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் அவர்களும் நம்மைப் போல சுவாமி தரிசனத்துக்கு வந்திருக்கிறார்கள், சிவ கங்கை குளத்தில் குளித்திருக் கிறார்கள் என்பதை நினைக்கும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது.

சரித்திர நினைவுகளோடு இரவு 10:30 மணிக்கு சென்னை எழும்பூரில் மலைக்கோட்டை விரைவு ரயில் வண்டியில் புறப்பட்டோம். மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், கல்லக்குடி, லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி, திருவெறும்பூர், பூதலூர் வழியாக தஞ்சாவூர் ஜங்ஷனை அடைந்த போது காலை மணி 6:15. ரயில் நிலையத்துக்கும் கோயிலுக்கும் அதிக தூரமில்லை. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் நிறைய தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் உள்ளன. விரைவாகத் தயாராகி கோயிலுக்குள் நுழைந்தோம்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில். பிருகதீசுவரர் கோயில் என்று இன்னொரு பெயரும் உண்டு. உலகப் பாரம்பரியச் சின்ன மாக விளங்குகிறது இந்தக் கோயில். 10-&ம் நூற்றாண்டில், சோழர்களின் ஆட்சி உச்ச நிலையில் சிறந்திருந்த போது, மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ராஜ ராஜேஸ்வரம் என்று வழங்கப்பட்டது. பின்னர், தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட காலத்தில், ‘தஞ்சைப் பெருவுடையார் கோயில்’ என்று வழங்கப்பட்டது. 17, 18ம் நூற்றாண் டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது பிருக தீசுவரம் ஆகியது. இப்போது தஞ்சைப் பெரியகோயில் என்றே குறிப்பிடப் படுகிறது.

இந்தக் கோயில் கட்டப்பட்ட காலம் &சோழர்களின் பொற்காலம். தமிழ்நாடு முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்தது. எல்லைக்கு அப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்தன. அரசாங்கத்துக்கு நிறைய வருமானம். கட்டிடக் கலையில் மக்களும் மன்னரும் ஆர்வமாக இருந்தனர். ராஜராஜ சோழனின் சிவபக்தி இந்தப் பிரமாண்டமான கோயில் உருவாக காரணமாக இருந்தது எனலாம். சுமார் 7 ஆண்டுகளில் இந்த அற்புதக் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 985 முதல் 1070 வரை சோழர்களின் ஆட்சி மிகச்சிறப்பான ஆட்சியாக விளங்கியது. அந்த நேரத்தில் கலைகள் பல செழித்து வளர்ந்தன. இந்தக் காலத்தை மத்திய சோழர் காலம் என்கிறார்கள். இக் காலத்தில்தான் ஏராளமான கோயில் களும் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றன.
அருகிலுள்ள கோயில்கள்
பேதஞ்சை பெரிய கோயில் அருகிலுள்ள 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான மணிக்குன்ற பெருமாள் கோயிலும் மிகவும் பழமையானது. பங்காரு
காமாட்சி கோயில், கொண்கணேஸ்வரர் கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் மற்றும் ராகு கால அம்மன் கோயில்… இப்படி நிறைய பழமை
மிக்க கோயில்கள் உள்ளன.

பரந்த சோழப் பேரரசின் புகழுக்கும் தமிழர் கட்டிடக்கலையின் வளர்ச் சிக்கும் சிறந்த உதாரணமாக இக் கோயில் திகழும் என்று எண்ணியி ருக்கிறார் ராஜராஜ சோழன். அவர் நினைத்தது போலவே ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அழியாப் புகழுடன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது பெரிய கோயில்.எதிரிகள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் விதத்தில், கோயிலைச் சுற்றிலும் மிக ஆழமான அகழி காணப்படுகிறது. இந்த அகழியில் இன்றும் நீர் ஓடுகிறது. அந்தக் காலத்தில் முதலைகள் இருந்திருக்கக் கூடும். அகழியைக் கடந்து உள்ளே சென்றால் வாசலில் ‘பெரிய யானை’ நின்று கொண்டிருக்கிறது. யானைக்கு பழம் கொடுத்து, ஆசிர்வாதம் வாங்கி உள்ளே நுழையலாம். குழந்தைகளோடு வந்தால் யானைக்கு குழந்தையையே வாழைப் பழம் அளிக்கச் செய்யலாம். மகிழ்வுறும் யானை குழந்தையை சவாரி ஏற்றி நன்றி சொல்லும்! உள்ளே… மிகப்பெரிய நந்தி மண்டபம், முன் தாழ்வாரம், அம்மன் கோயில், சுப்ரமணியர் கோயில் ஆகியவை பிற்காலத்தில் கட்டப் பட்டவை. நந்தியின் உயரம் 12 அடி. 19.5 அடி நீளம். 9 அடி அகலம். 25 டன் எடை. நந்திக்கென்றே நெய்யப் பட்ட பெரிய வேஷ்டி நந்தியைச் சுற்றி கட்டப்பட்டிருக்கிறது. ஒரு சுற்றுச் சுற்றி விட்டு, கீழே இறங்கினால் எதிரே பிரகதீசுவரர் கர்ப்ப கிரகம்.

பிரகதீசுவரர் கர்ப்பகிரகத்துக்குள் நுழைந்தால் சட்டென இருள் சூழும். சில வினாடிகள் சுதாரித்து நிமிர்ந்து பார்த்தால் சற்றுத் தூரத்தில் பிரமாண்ட லிங்கம்! கருங்கல்லில் பளபளக்கும் வெள்ளித்தகட்டில் மூன்று பட்டைகளுடன் காட்சி யளிக்கிறது. சிவலிங்கத்தில் பாணத்தின் உயரம் 12.5 அடி. சுற்றளவு 23 அடி. ஆவுடையார் 55 அடி சுற்றளவு. சிவலிங்கத்துக்கு அபிஷேகம், அலங் காரம் செய்வதே பிரமிப்பான விஷயம். இரு பக்கங்களிலும் இருக்கும் சிறு ஏணிகளில் ஏறி, மேடையில் நின்றுதான் செய்ய முடியும். அருகில் செல்லச்செல்ல உடலும் மனமும் சிலிர்க்கிறது.

பிருகதீசுவரர் வீற்றிருக்கும் பிரதான கட்டிடம் 150 அடி நீளம் கொண்டது. மிகப்பிரமாண்டமான விமானக் கூரை கூர்மையான கோபுரமாக அமைந் திருக்கிறது. கர்ப்ப கிரகத்திலிருந்து 216 அடி உயரத்துக்கு ஓங்கி வளர்ந் திருக்கிறது இக்கோபுரம். இதில் 13 தளங்கள் இருக்கின்றன. அதற்கு மேல் பிரமரந்திர தளம் உள்ளது. இது ஒரே கல்லால் ஆனது. 80 டன் எடை கொண்டது. சிகரத்தின் உச்சியில் பொன் தகடால் ஆன செப்பு ஸ்தூபி.
பெயர் வந்தது எப்படி?
பேதஞ்சன் என்ற அசுரனை இந்த இடத்தில் இருந்த மக்களை துன்புறுத்தி வந்தான். மக்களைக் காக்க சிவபெருமான் அவனை வதம் செய்தார். அதனால்
தஞ்சாவூர் என்ற பெயர் வந்தது. அத்துடன் சிவபெருமானுக்கு இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. வைணவத்தில் இதே
புராணம் சிறிது மாற்றப்பட்டு பெருமாளே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாகக் கோயில் கொண்டுள்ளார்
என்றும் கூறப்படுகிறது.
பேகோயில் ராஜன்முதலாம் ராஜராஜ சோழன் & சுந்தரசோழன் என்ற இரண்டாம் பராந்தக சோழனின் இளைய மகன். இயற்பெயர் அருண்மொழித்தேவன். பட்டப்பெயர்
ராசகேசரி. தில்லைவாழ் அந்தணரால் ராஜராஜன் என்று பெயர் சூட்டப்பட்டவன். சிவபாதசேகரன், திருநீற்றுச்சோழன் முதலிய பெயர்களும் உண்டு.
கோயிலின் வெளிப்பகுதியில் ராஜராஜ சோழனின் சிலை கம்பீரமாக நின்று கொண்டு, மக்களை வரவேற்கிறது.

ஆராதனை முடிந்து படியிறங்கி வந்தால் இடது பக்கம் விநாயகர் கோயில். வலது பக்கம் சுப்ரமணியர் கோயில். கோயில் பிரகாரத்தைச் சுற்றிலும் 108 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. கோயிலின் மதில் சுவரின் மீது சிறிய இடைவெளிகளில் நந்திகள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணப்பூச்சு எதுவும் இல்லாதது இந்தக் கோயிலின் சிறப்பு. ஆலயத்தின் உள்ளே உள்ள கூரைகளில் அந்தக் கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பெரிய பரப்பளவில் கோயில் அமைந் துள்ளதால் எவ்வளவு கூட்டம் வந்தாலும் நெரிசலாகத் தெரிவதில்லை. கோயிலுக்குள் கடைகள் எதுவும் இல்லாததால் குப்பைகள் இல்லை. எங்கும் சுத்தம். எங்கும் அமைதி!

சுவாமி எழுந்தருளியுள்ள விமானம் தட்சிண மேரு அல்லது உத்தம விமானம் என்று அழைக்கப்படுகிறது. அருகில் இருக்கும் சிவகங்கையில் நீர் குறைந்திருக்கும் காலத்தில் சிவலிங்கம், நந்தியைக் காணலாம். கோயிலின் முதல் கோபுர வாயிலுக்குக் கேரளாந்தகன், இரண்டாம் கோபுர வாயிலுக்கு ராஜராஜன் வாயில், தெற்குக் கோபுர வாயிலுக்கு விக்கிர சோழன் வாயில் என்று பெயர். நடராஜ மண்டபம் மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தது. சதய விழா, கார்த்திகை விழா, பெரிய திருவிழா முதலியவை பண்டைய காலத்தில் நடைபெற்றன. பெரிய திருவிழா எனப்படும் பிரம்மோற்சவம்’ஆட்டைத் திருவிழா’ எனப்பட்டது. வைகாசியில் நடைபெற்ற இந்த விழாவில் ராஜராஜ நாடகம் நடிக்கப்பட்டது.

ராஜராஜன் காலத்தில் சுவாமிக்கு செண்பக மொட்டு, ஏல அரிசி, எலுமிச்சை ஆகியவை ஊறவைத்த நன்னீரால் அபிஷேகம் செய்யப் பட்டது. பருப்பு நெய் தயிர் அமுதுகள் நிவேதனமாகப் படைக்கப்பட்டன. சுவாமிக்கு முன் திருப்பதிகம் விண்ணப்பிக்க 48 பிடாரர்களும், உடுக்கை வாசிக்க ஒருவரும், கொட்டு மத்தளம் முழக்க ஒருவருமாக 50 பேர்களை ராஜராஜன் நியமித்ததாக கல்வெட்டுகள் சொல்கின்றன. இவர் களுடைய பெயர்கள் அனைத்தும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. அப்பெயர்கள் அனைத்தும் அகோர சிவன், ஞானசிவன், தத்புருஷசிவன், பரமசிவன், ருத்ரசிவன், யோகசிவன், சதாசிவன் என்று முடிவதால் இந்தக் கோயிலில் தீட்சை பெற்றவரே திருப்பதிகம் விண்ணப்பிக்க நியமிக்கப் பட்டனர் என்று தெரிகிறது. முதலாம் ராஜராஜன் கோயிலைக் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்த போது, ஆவுடையாருடன் மூர்த்தியைச் சேர்த்து அஷ்ட பந்தன மருந்துசார்த்தினர். அந்த மருந்து கெட்டியா காமல் இளகிய நிலையிலேயே இருப் பதைக் கண்ட மன்னன் வருத்த மடைந்தான். அதை அறிந்த போக முனிவர், கருவூர்த் தேவரை கோயிலுக்குள் அழைத்துச் செல்லுமாறு அரசனுக்குச் செய்தி யனுப்பினார். அதன்படி கருவூர்த் தேவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தான் மன்னன். கருவூர்த்தேவர் தஞ்சை வந்து கோயிலுக்குள் சென்று தம்வாயிலுள்ள தாம்பூலத்தை மருந்தாக உமிழ்ந்து கெட்டியாக்கினார் என்று சொல்லப் படுகிறது. ‘இது உண்மை அல்ல, இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை’ என இன்னொரு கருத்தும் நிலவுகிறது.

இத்தலத்துக்கு கருவூர்த்தேவர் திருவிசைப்பா பாடியுள்ளார். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள்,- சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க் கருளிய அப்பெருமானின் நலங்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. சைவ தத்துவங் களையும் எடுத்துரைக்கிறது.
கோயில் சுவரை ஒட்டி அமைந்துள்ள இடம் ராஜேந்திர சோழன் கட்டிய நீர்த்தடாகம் சிவகங்கை. இப்போது ‘சிவகங்கை பூங்கா’வாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தலைசிறந்த சிற்பக் கலையழகு வாய்ந்த இந்த அற்புதத் திருக்கோயில் தொல்பொருள் துறையின் பராமரிப்பில் உள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருக்கோயில். கோயில் வழிபாடு, நிர்வாகம் அரண்மனை தேவஸ்தானத்தின் மூலம் நடைபெறுகிறது.
காலை 6 மணிக்கு கோயில் வழிபாடுகள் தொடங்குகின்றன. மதியம் 12.30 மணிக்கு கோயில் நடை சார்த்தப்படும். மீண்டும் 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சார்த்தப்படும். பரந்த நிலப்பரப்பில், ஓங்கி உயர்ந்துள்ள கோயில் கோபுரம் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் வரும் ரயில் பாதையில் 4 கிலோமீட்டர் தூரத்திலிருந்தே தெரிய ஆரம்பிக்கிறது. அதே போல மருத்துவக் கல்லூரி வழியாக வல்லம் செல்லும் பாதையிலும் 4 கிலோமீட்டர் தொலைவு வரை பேருந்தில் இருந்தவாறே இந்தக் கோபுரத்தைக் கண்டுகளிக்க முடியும். வெளியே வந்த பிறகும் நிஜக்கண்ணிலும் மனக்கண்ணிலும் கோயில் தென்பட்டுக்கொண்டே இருப்பது பெரிய விஷயம்தானே.

No comments:

Post a Comment